நாட்டில் சேவையிலுள்ள காவல்துறை அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதை குறிப்பிட்டார்.
காவல்துறை அதிகாரிகளில் 20% – 40% வரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30% பேர் இன்னும் சோதனை செய்யவில்லை.
மீதமுள்ள 30% பேர் சில உடல்நலப் பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
சில அதிகாரிகளுக்கு வீட்டுப் பிரச்சினைகள், வேலையின் அழுத்தம் போன்றவை காரணமாகவும் தொற்றா நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், காவல்துறை சேவையை இன்னும் ஒழுங்குபடுத்தி, காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தி, அவர்கள் செய்யும் சேவையை ஒரு உயர் தரமான பணி எனக் காட்டி, அதற்கேற்றவாறு பல நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காவல்துறை அதிகாரிகள் தற்போது மிகவும் குறைந்தளவான வேதனத்தையே பெறுகின்றனர். இந்த விடயம் ஜனாதிபதியினுடைய கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதற்கமைய, அடுத்த வருடம் புதிய வேதன முறைமையொன்றை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.