முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையை, இலங்கை பொதுஜன பெரமுன சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து விஜயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் மொட்டுக்கட்சி உயர்பதவிகளில் இருந்ததோடு, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு (UNP) ஆதரவு தெரிவித்த சில முக்கிய உறுப்பினர்களும் இவ்வாறே விஜேராம இல்லத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போதைய எதிர்க்கட்சி தரப்பைச் சேர்ந்த இருவர் அல்லது மூவர் இரகசியமாக மஹிந்தவுடன் சந்திப்பை திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவுகின்றன.
அதுமட்டுமல்லாமல், ரத்தினபுரி, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் எம்.பிக்கள் சிலர் தற்போது விஜேராம இல்லத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்களில் ஈடுபட்டவர்களில் பலர் மீது குற்றச்சாட்டு மற்றும் வழக்குகள் நிலவுவதால், அரசியல் பாதுகாப்பு அல்லது எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு புதிய ஆளுமைகள் கட்டமைப்பதற்காகவே இச்செயற்பாடுகள் நடைபெறுகின்றன எனத் தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதால், இச்சந்திப்புகள் அவரது அரசியல் மீட்புத் திட்டத்தில் முக்கியக் கட்டமாகக் கருதப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.