முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான சில முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என நான் அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டேன். இதனையடுத்து, விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என கூறினார்.
நீதிமன்றத்தில் இவை முன்வைக்கப்பட்ட பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கிணங்க மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்;
“நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு பாதாளக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களே காரணமாகின்றன. தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துக்கும் இதுவே பின்னணியாகும்,” என தெரிவித்தார்.
பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படைச் சோல்சென்றும் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குழு உறுப்பினர்களை கைது செய்வதற்காக இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், சட்டவிரோத ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை மீட்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.