இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
‘கே.எம். பார்சிலோனா 5’ எனும் பயணிகள் கப்பல், மனாடோ கடற்கரையில் பயணித்தபோது தீப்பிடித்தது. சம்பவத்தின்போது பயணிகள் பீதி அடைந்து தண்ணீரில் குதித்துக் காப்பாற்றிக்கொண்ட காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. மேலும், சிலர் கப்பலுக்குள் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை தெளிவாகவில்லை. இந்தோனேசிய அதிகாரிகள் உயிரிழப்புகள் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீவிபத்தினை விசாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆழமான கவலை எழுந்துள்ளது.