தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய கடிதத்தை வலுவற்றதாக்கி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை செயல்படுத்துவதைத் தடுத்து உயர் நீதிமன்றத்தால் இன்று (22) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அன்று காலி முகத்திடலில் நடந்த “கோட்டா கோ கம” போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் அப்போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிமாடு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
இந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, வழக்கில் பிரதிவாதிகளின் பட்டியல் திருத்தப்படவில்லை என்று தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளையும் நீதிமன்றம் நிராகரித்தது.
தேசபந்து தென்னகோனை குறித்த சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அனுப்பிய கடிதம் முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்று ஜனாதிபதி சட்டத்தரணி வலியுறுத்தினார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு, மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது.
அத்துடன் மனுவில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை குறித்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.