மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கப்படும் எனவும் அமைச்சரவை நாட்டை நிர்வகிக்கும் எனவும் அவர் கூறினார்.
சுகாதாரத்தை நளிந்த ஜயதிஸ்ஸ, நிஹால் அபேசிங்க போன்றவர்கள் கொண்ட குழுவும், பொருளாதாரத்தை சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க போன்றவர்களும் கட்டுப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஜே.வி.பி.யின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தாம் நாட்டின் ஜனாதிபதியானால் அரசியல்வாதிகளின் அனைத்து சிறப்புரிமைகளும் இல்லாதொழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என அவர் தொலைக்காட்சி கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.