கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்படும் மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற அம்சங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
அரச மற்றும் தனியார் துறையை இணைத்து வழிகாட்டுதல்களை வழங்குமாறு அமைச்சர் கூறினார். இத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இந்த பணிப்புரைகளை வழங்கினார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோரைக் குடிவைப்பதற்காக இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அதற்கான நிதியுதவியை ஆசிய உள்கட்டமைப்பு பொது வசதிகள் அபிவிருத்தி வங்கி வழங்கும்.
கொழும்பகே மாவத்தை, ஸ்டேடியம்கம, ஆப்பிள்வத்த, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர, மாதம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் தொகுதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
கால்நடைகள் மற்றும் கோழிகளை வளர்க்கும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்வதற்கு குடியிருப்புகளுக்கு அண்மையில் சிறிது இடம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார். அப்படி இல்லை என்றால் மக்கள் அனாதரவாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றிப் பரவி வரும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில், அந்த குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்களைத் தொடர்பு கொண்டு போதைப் பொருள் ஒழிப்புப் படையை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.