மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைவதனை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் பிரதான நிகழ்வு கொழும்பில் நடைபெறுவதோடு இதற்கு இணையாக நாட்டின் 13 மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் மலையக அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் 22 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டின் நீர் வழங்கல் பணியின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துவதுடன் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக வழங்குதை நோக்கமாகக் கொண்டு நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், நீர் வழங்கலின் தரத்தைப் பேணுவதற்கும் இவ்விடயத்தை மிகக் கவனமாக பரிசீலனை செய்து விரிவான கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் முகம்கொடுத்துள்ள கஷ்டங்களை தான் ஏற்றுக்கொள்வதுடன், இந்தக் கட்டண அதிகரிப்புக் காரணமாக எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் சவால்கள் சம்பந்தமாக கவனம் செலுத்துவதாகவும், எமது அபிவிருத்தி சார்ந்த பங்குதாரர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் இணக்கத்தின் அடிப்படையில் புதிய நீர்க் கட்டண சூத்திரம் மற்றும் கொள்கை ஒன்றினை அறிமுகப்படுத்தி எதிர்வரும் மாதங்களில் நீர் கட்டணத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.