இறக்குமதி செய்யும் பைனஸ் பலகைகளுக்கான வரியை அதிகரிக்குமாறு முன்மொழிவு

131

இலங்கையில் பலகைகளாக மாற்றுவதற்குப் பொருத்தமான பைனஸ் பயிர்கள் காணப்படுவதால், உள்நாட்டு பைனஸ் பலகைகளுக்கான செலவைக் குறைக்குமாறு அரச மரக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆலோசனை வழங்கியது.

அரச மாரக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பைனஸ் பலகைகளுக்கான செலவு மற்றும் உள்நாட்டுப் பைனஸ் பலகைகளை தயாரிப்பதற்கான செலவு தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதற்கமைய, இலங்கையில் பலகைகளாக மாற்றுவதற்குப் பொருத்தமான பைனஸ் 2,964 ஹெக்டயார்கள் காணப்படுவதாகவும், அதில் 750,000 கன மீட்டர் பலகையாக மாற்ற முடியும் என குழுவில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும் ஒரு வருடத்துக்கு 15,462 கன மீட்டர், சுமார் 160 கோடி ரூபாய் பெறுமதியான பைனஸ் பலகை இறக்குமதி செய்யப்படுவதாக குழுவில் புலப்பட்டது.

தற்பொழுது 922 கோடி ரூபாய் பெறுமதியான 375,000 கன மீட்டர் பிரித்தெடுக்கப்பட்ட பலகைகள் காணப்படுகின்றதால் மேலும் பைனஸ் பலகைகளை இறக்குமதி செய்வது சிக்கலானது என குழு சுட்டிக்காட்டியது. உள்நாட்டில் பிரித்தெடுக்கப்பட்ட பைனஸ் பலகைக்கான (2 கன மீட்டர் மரக்குற்றி) செலவு ஒரு கன மீட்டருக்கு சுமார் 115,000 ரூபவாக உள்ளதுடன், பைனஸ் பலகை ஒரு கன மீட்டர் இறக்குமதி செய்ய சுமார் 93,500 ரூபாய் செலவாவதாக இதன்போது புலப்பட்டது.

இலங்கை முகங்கொடுத்துவரும் அந்நியச்செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் பாரிய நிதி செலவு செய்து இந்நாட்டுக்கு பைனஸ் பலகை இறக்குமதி செய்வது சிக்கலாகக் காணப்படுவது துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

தற்பொழுது காணப்படும் பைனஸ் மரங்களை வெட்டியதை அடுத்து, மீண்டும் பைனஸ் பயிரிடுவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெறுவதற்கும், அவ்வாறு பைனஸ் பயிரிடுவதானால் அதற்குப் பொருத்தமான பைனஸ் வகையை தேர்ந்துடுப்பது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here