சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ், 20 ஆண்டுகளாக இருந்த கோமா நிலையில் இருந்து மீளாமல், தனது 36-வது வயதில் உயிரிழந்தார்.
2005ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படித்து வந்த காலத்தில் ஏற்பட்ட கார்விபத்தில் மூளையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அவர் கோமா நிலையில் சென்றார். அதன்பின்னர் சவூதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் கடந்த இருபது ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தார்.
இளவரசரின் தந்தையான இளவரசர் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் தனது மகனின் மறைவை உறுதிப்படுத்தி, “அல்லாஹ்வின் விதியும் ஆணையும் என்பதை நம்பிக்கையுடன் ஏற்று, ஆழ்ந்த துக்கத்துடன் என் அன்பு மகனின் உயிரிழப்பை அறிவிக்கிறேன். அல்லாஹ் அவருக்கு பரிசுத்தமான இரக்கம் அளிக்கட்டும்” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இளவரசரின் மறைவு, சவூதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.