நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில் அதன் முக்கிய தலைவர்கள் தற்பொழுது தீர்மானித்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சி எதிர்கொண்ட பின்னடைவுகள், கட்சிக்குள் உள்முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சூழ்நிலையில், செயற்திறனற்ற மற்றும் செயலற்ற அமைப்பாளர்களை நீக்கி, செயலில் திறமை கொண்ட புதிய தலைமுறையை கொண்டு வர கட்சி உள்மட்ட மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
சில பழைய அமைப்பாளர்களின் பதவிகள் நீக்கப்பட உள்ளன, புதிய, செயல்திறன் வாய்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர், புதிய தலைமைத்துவம் குறித்து கட்சி உறுப்பினர்களிடையே போராட்டங்கள் உருவாகலாம் என கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“ஐக்கிய மக்கள் சக்தியில் தலைமைத்துவ மாற்றத்திற்கான போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும். இது கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்,” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து, அவர் கடவுச்சீட்டு குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பும் போது தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.