மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நம் உடல் செயல்பாடுகளை சமநிலைப்படுத்துகின்றன.
இதில், அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் முக்கியமானது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது.
உதாரணமாக, பாம்பு, கரடி போன்ற ஆபத்தான உயிரினங்களை எதிர்கொள்ளும்போது, நம் உடல் ஓடிச் சென்று உயிர் தப்பிக்க கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. ஆனால், ஒருவருக்கு மன அழுத்தம் தொடர்ந்து நீடித்தால், கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக உற்பத்தி ஆகி, உடலில் தீங்கு விளைவிக்கும் நிலை உருவாகலாம்.
அதாவது, கார்டிசோல் அதிகரித்தால் ரத்த அழுத்தம் உயர்ந்து, சர்க்கரை அளவும் அதிகரிக்கும். இதனால் ரத்த அழுத்த பாதிப்பு மற்றும் டைப்-2 வகை நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.
மேலும், கார்டிசோல் சுரப்பி அதிகரித்த போது, முகம், கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் கொழுப்பு பெருகி, சிலருக்கு கழுத்தில் `எருமை திமில்’ போன்ற கொழுப்பு திரட்டுகள் தோன்றும். இதன் காரணமாக உடல் பலவீனமடைந்து, மேலும் சுகாதார பிரச்சினைகள் உருவாகலாம்.
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதும், இன்ப துன்பங்களை சமமாக கருதும் மனநிலை மற்றும் தியானம் போன்ற மனஅழுத்தம் குறைக்கும் பயிற்சிகள் மூலம் கார்டிசோல் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பை கட்டுப்படுத்த முடியும். இது உடல் நலனுக்கு பெரும் உதவியாக அமையும்.