முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அரசாங்கத்தால் உறுதிசெய்யப்படுமா? என்ற ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் இலக்காகக் கொண்டல்ல. உயிருடன் உள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் தொடர்பில் ஒரு பொது முடிவை எடுத்து இருக்கிறோம். இது குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகள் அடிப்படையில், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.”
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை வர்த்தமானி அறிவிப்பு மூலம் நிறைவு செய்யும் வகையில், தலைப்புச் சட்டம் திருத்தப்படவிருக்கிறது என்றும், அதற்கான ஒப்புதல் அமைச்சரவை மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டத் திருத்தம் தொடர்பான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
“1986ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்த சட்டமூலத்தில் ஓய்வு பெறும் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு, வீட்டு வசதி போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இன்று அவை தெளிவில்லாத நிலையில் இருப்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்து, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு, உரிமைகள், கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை கொண்டுவர விரும்புகிறோம்,” என்றார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் இதுபற்றி கேட்கப்படவில்லை என்றும், அவர் அந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்ததை நினைவுபடுத்தியும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, பாதுகாப்பு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளும், தற்போதைய முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் பாதுகாப்பு வழங்குவதில் சமநிலை நிலவவேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.