follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1வடக்கு கிழக்கை இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் அரசு மேற்கொள்ளவில்லை

வடக்கு கிழக்கை இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் அரசு மேற்கொள்ளவில்லை

Published on

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதற்க முன்னர் விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ஷ அல்ல என்றும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது தனது நோக்கமல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச சட்டமூலம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. பிரதேச செயலாளர்கள் நியமனம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் உயர் கல்வி, விவசாயப் புத்தாக்கம் மற்றும் தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பிலான சட்ட மூலங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான வரைவு அரசியலமைப்பிற்கு அமைவானதா என்பதை அறிய சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (ONUR) நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்ட வரைவை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி தமிழ் எம்.பிக்கள் இங்கு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், எந்த விதத்திலும் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான ஏற்பாடோ அதுகுறித்த கலந்துரையாடல்களோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் நீதி நிலைநாட்டும் செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையெனவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு அமைய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் இதுவரை 3,462 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இங்க குறிப்பிடப்பட்டது.

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு, காணாமல் போனோர் தொடர்பிலான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தமிழ் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது தொடர்பில் அவர்களிடத்திலுள்ள தகவல்களை உண்மையை கண்டறிவதற்கான இடைக்கால பொறிமுறைக்கான செயலகத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.

ஊழல் ஒழிப்புச் சட்டம், ஜுலை 19 ஆம் திகதி பாராளுமன்ற குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தியில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் பசுமை ஹைட்ரஜனின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

மேலும் “வடக்கிற்கு நீர்” திட்டத்தின் கீழ் பூநகரி ஏரி அபிவிருத்தி, யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் வழங்கும் நதிநீர் திட்டம், இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பது, சிறிய குளங்களின் புனரமைப்பு, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வவுனியா மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், வட மாகாணத்தையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் படகுச் சேவை, காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விளக்கினார்.

வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சுற்றுலாத்தலங்களின் அபிவிருத்தி, மன்னார் கோட்டை மற்றும் தீவுகள், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வடமராட்சி பிரதேசத்தில் சுற்றுலா படகுச் சவாரித் திட்டம், வன்னி மாவட்டத்தில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் மற்றும் பல்கலைக்கழக நகரமாக யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் குறித்து வடக்கு மற்றும் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...