இப்போதெல்லாம் ‘கிளீன் ஷேவ்’ செய்த ஆண்களை விட, தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது. இதனால் ஆண்கள் பலர் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு வளர்க்கும் தாடியை, பராமரிக்க முடியாமல் பலர் திண்டாடுகின்றனர். அவர்களுக்காக தாடியை பராமரிக்கும் சில வழிமுறைகளை இங்கு தருகிறோம்.
தாடி வளர்க்கப் போவதாக முடிவெடுத்து விட்டால், ஒரு வாரத்திற்கு தினமும் கிளீன் ஷேவ் செய்யுங்கள். பின்னர் தாடி வளர்த்தால், அழகாகவும், மென்மையாகவும் தாடி வளரும்.
தாடியை வளர்க்க எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அதே அளவுக்கு அதனை டிரிம் செய்யும்போதும் கவனம் செலுத்த வேண்டும். சற்று கவனம் சிதறினாலும் உங்களின் தாடி அஷ்ட கோணல் ஆகி விடும்.
மென்மையான தாடிதான் எப்போதும் அழகு. எனவே வாரத்திற்கு இரு முறை தாடிக்கு ஷாம்பு போடுங்கள். தாடிக்கென சில பிரத்யேக ஷாம்புகள் கடைகளில் விற்பனையாகிறது. அவற்றை தாடிக்கு பயன்படுத்தலாம்.
ஷாம்பு போட்டு தாடியை கழுவியதும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது தாடியை மேலும் மென்மையாக்கும்.
தாடியை ஷாம்பு போட்டு கழுவும்போது, கவனமாக இருங்கள். நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவினால் மட்டுமே, ஷாம்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் தாடியில் தங்காமல் இருக்கும்.
தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள். தலையில் பொடுகு இருக்கும் நபர்கள், தலைக்கு பயன்படுத்தும் சீப்பை தாடிக்கு பயன்படுத்த வேண்டாம்.
தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யை தாடிக்கும் தடவலாம். இதனால் தாடியில் இருக்கும் முடியின் வேர்கள் வலுவடையும். மேலும் தாடி பழுப்பு நிறத்தில் மாறுவதும் தவிர்க்கப்படும்.