பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்திருந்தார்.
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் (01) முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
“இப்போதைய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நுரையீரல் புற்றுநோய் அதிகரிக்கும் ஒரு அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஆண்கள் இந்த நோய்க்கு அதிகமான பாதிப்புக்குள்ளாகின்றனர். புகையிலை புகைத்தல் மற்றும் தொழில்சார் காரணிகள் இத்தகைய நோயாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன,” என்று வைத்தியர் இத்தகொட எச்சரித்தார்.
அவர் மேலும், நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் மிகவும் முக்கியமானது என்றும், புகையிலை தவிர்க்கும் பழக்கம், பாதுகாப்பான வாழ்க்கை முறை, மற்றும் அடிக்கடி சோதனை செய்யும் பழக்கம் ஆகியவை, இந்த நோயைத் தடுக்க உதவக் கூடியவை என்று தெரிவித்தார்.