உலகளவில் பெரும்பாலானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை தான் உடல் பருமன். இந்த உடல் பருமன் பிரச்சினையை கொண்டவர்களால் தங்களின் தினசரி வேலைகளை செய்வது கூட சிரமமாக இருக்கும்.
அந்த அளவில் உடல் பருமன் ஒருவரது வாழ்க்கையையே சிரமமாக்கும். அதோடு இந்த உடல் பருமனால் ஏராளமான பல ஆரோக்கிய பிரச்சினைகளாலும் அவதிப்பட நேரிடும். எனவே உடல் பருமனைக் கொண்டவர்கள் அதைக் குறைக்க உடனே முயற்சிக்க வேண்டும்.
உடல் பருமனைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதில் பொதுவாக நிறைய பேர் பின்பற்றும் ஒரு பழக்கம் தான் சுடுநீரை குடிப்பது. சுடுநீரைக் குடித்தால் உடல் பருமன் குறையும், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் வேகமாக கரையும் என்று நிறைய பேர் நினைக்கின்றனர். உண்மையில் சுடுநீரைக் குடித்தால் உடல் பருமன் குறையுமா என்ன? உண்மை என்ன என்பது குறித்து உணவு ஆலோசகரான டாக்டர். அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விரிவாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால், முதலில் உடல் பருமன் என்றால் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். உடல் பருமன் என்பது தோலுக்கு அடியில் தேங்கியுள்ள கொழுப்புக்களால் வரக்கூடியது. இந்த கொழுப்புக்கள் நாம் சாப்பிடும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் மட்டும் சேர்வதில்லை. இந்த கொழுப்புக்களானது நாம் அதிகமாக எடுக்கும் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவற்றில் உடலுக்கு தேவையானதை விட அதிகமாக இருந்தால், அவை கொழுப்புக்களாக உடலில் தேங்கும். இப்படி தேங்கும் கொழுப்புக்கள் தான் உடல் பருமனுக்கு அடிப்படை காரணம்.” என்று கூறினார்.