ஜனாதிபதி செயலகத்திற்குள் ஜூலை மாதம் 13 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து ஊடக சந்திப்பு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மேலும் இரு போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.
போராட்டக்கள செயற்பாட்டாளர்களான சங்க ஜயசேகர மற்றும் சமல் அகலங்க ஆகியோரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஊடக சந்திப்பை நடத்திய குற்றச்சாட்டில், இதற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட கொஸ்வத்தே மஹாநாம தேரர், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் துமிந்த நாகமுவ ஆகியோரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என கொழும்பு வடக்கு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
விசாரணைகளை நிறைவு செய்து எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.