ரூ.100 உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை

354

அரசு ரூ.100 உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக ஜனாதிபதி உறுதி

ஒரு கிலோ நெல் 100 ரூபா உத்தரவாத விலையில் அரசாங்கத்திடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் பரந்தன் வெளியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வடமாகாண அறுவடை நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வடமாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இவ்வருடம் உபரியான நெல் அறுவடை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் பலர் பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் அரிசியை கொள்வனவு செய்வதற்கான நிதி பலம் இல்லாத பகுதிகளும் நாட்டில் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இவ்வாறான பொருளாதார சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள இனங்காணப்பட்ட 20 இலட்சம் குடும்பங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு ஹெக்டேருக்கு நெல் விளைச்சல் 03 மெற்றிக் தொன் எனவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 06 மெற்றிக்தொன் நெல் பெறுவது அவசியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முடிந்தால் விளைச்சலை ஹெக்டேர் ஒன்றுக்கு 07 மெற்றிக் தொன் அரிசியாக அதிகரிக்க வேண்டும், அந்த முன்னேற்றத்திற்கு தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நவீன அரிசி ஆலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், எதிர்வரும் 02 வருடங்களுக்குள் அந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முடிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here