களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக மருத்துவமனைகள், பாடசாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களின் நலன்களைத் தேடியறியும் நோக்கில் நேற்று(07) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தப் பகுதியில் IDH மருத்துவமனை, இ.போ.ச டிப்போ போன்ற அரச நிறுவனங்கள் உள்ளன. எனவே புதிய நகரை உருவாக்குவது குறித்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு அனைவரின் இணக்கப்பாட்டுடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்திட்டம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியற்ற நிர்மாணங்கள், காணிகளை நிரப்புதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனவே, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் காணி நிரப்புப் பணிகளை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறவும் எதிர்பார்க்கப்படுவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.