பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods (UPF)) அதிகமாக உண்ணும் மக்கள் விரைவாகவே இறக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிஸ்கட்கள், குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம், காலை உணவில் பயன்படுத்தப்படும் சீரல் (பதப்படுத்தப்பட்ட தானிய உணவு) போன்றவை இத்தகைய அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு எடுத்துக்காட்டாகும். தற்போது இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
யூ.பி.எஃப். எனப்படும் இத்தகைய உணவுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படுவதில்லை. உணவின் தோற்றத்தை மேம்படுத்த நிறமூட்டிகள் போன்ற சேர்க்கைப் பொருட்கள், இனிப்பூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆரோக்கியத்தை இந்த உணவுகள் எப்படி மோசமாக்கும் என்று கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறும் சில நிபுணர்கள், பதப்படுத்துதலில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன என்கின்றனர். இத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பது காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஒருவரின் ஆயுளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பாக இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் மதிப்பாய்வு செய்துள்ளனர்.
அவர்களின் ஆய்வுக் கட்டுரை அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் ப்ரிவெண்டிவ் மெடிசன் இதழில் வெளியிட்டப்பட்டுள்ளது.
இத்தகைய உணவுகளை உட்கொள்வதால் மனிதர்கள் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு உறுதியாக நிரூபிக்கவில்லை.
ஒருவரின் உணவில் அதீத பதப்பட்டப்பட்ட உணவு இடம்பெறுவது என்பது, அவர் உணவு உட்கொள்ளும் விதம், உடற்பயிற்சி பழக்கம், வாழ்க்கை முறை, பணவசதி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அதனை உறுதியாக நிரூபிக்க இயலவில்லை.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, கொலாம்பியா, மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய 8 நாடுகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் இறப்பு தொடர்பான தரவுகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன.
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் யாவை?
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் என்ன என்பதற்கு அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒற்றை விளக்கம் இல்லை. ஆனால் நோவாவின் (NOVA) வகையீடு அதிகமாக பயன்படுத்தப்படுபவற்றை அதீத பதப்படுத்த உணவு என்று சொல்லலாம்.
கேக்குகள், பிஸ்கட்டுகள்
சிப்ஸ்
சூப்பர்மார்க்கெட்டில் இருந்து பெறப்படும் ரொட்டி (bread)
சாசேஜ்கள், பர்கர், ஹாட் டாக்
உடனடியாக பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்படும் சூப், நூடுல்ஸ், டெசர்ட்கள்
சிக்கன் நக்கெட்ஸ்
ஃபிஷ் ஃபிங்கர்ஸ்
பழ யோகர்ட் மற்றும் அடைக்கப்பட்ட பழச்சாறு
வெண்ணெய்க்கு மாற்றாக தாவர மற்றும் விலங்கு எண்ணெய்யில் இருந்து பெறப்படும் மார்கரைன்ஸ்
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஃபார்முலாக்கள்