இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தொடங்கியுள்ளது.
புதிய சூழ்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகக் குழு கூடி, இன்றைய தினம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி, தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
போட்டியை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், பத்து அணி உரிமையாளர்களும் வெளிநாட்டு வீரர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்திய அரசாங்க அனுமதியைப் பெற்றால், எதிர்வரும் 15 ஆம் திகதி போட்டிகள் மீள ஆரம்பிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதற்றங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 8 ஆம் திகதி அன்று தரம்சாலாவில் முதல் இன்னிங்ஸின் நடுவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போட்டிகளை ஒரு வாரம் நிறுத்தி வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.