பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ‘அவாமி லீக்’ கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவும் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள சாட்சிகள் மற்றும் முறைப்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவாமி லீக்கை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய கட்சியின் செயல்பாடுகளை முடக்கியது சட்டவிரோதம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 77 வயதான ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
மாணவர் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து, அவர் மற்றும் அவரது மூத்த கட்சித் தலைவர்கள் பலர் மீது படுகொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல அவாமி லீக் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.
1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவாமி லீக், 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் விடுதலை பெறுவதில் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.