இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
சில நாட்களாகவே விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி வந்தன.
அவர் பிசிசிஐ-யிடம் தனது ஓய்வு முடிவைத் தெரிவித்து விட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
இதை அடுத்து விராட் கோஹ்லியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
சர்வதேச அளவில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக பார்க்கப்பட்டார் விராட் கோஹ்லி. அவர் 10000 டெஸ்ட் ஓட்டங்களை நெருங்கிய நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
தனது ஓய்வு குறித்து விராட் கோஹ்லி வெளியிட்டு இருக்கும் பதிவு;
“டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் அந்த ‘பேகி ப்ளூ’ தொப்பியை அணிந்து இப்போது 14 வருடங்கள் ஆகிவிட்டன. உண்மையில், இந்த கிரிக்கெட் வடிவம் என்னை இப்படி ஒரு பயணத்தில் அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது என்னைச் சோதித்தது, செதுக்கியது, வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.
வெள்ளை உடையில் விளையாடுவதில் ஏதோ ஒரு தனிப்பட்ட உணர்வு இருக்கிறது. அந்த அமைதியான கடின உழைப்பு, நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத ஆனால் என்றென்றும் உங்களுடன் தங்கிவிடும் சிறிய தருணங்கள்… இந்த வடிவத்திலிருந்து
நான் விலகுகிறேன், அது எளிதானது அல்ல – ஆனால் இது சரியானது என்று தோன்றுகிறது. என்னிடம் இருந்த அனைத்தையும் நான் இதற்கு கொடுத்துவிட்டேன், அதற்கு ஈடாக நான் எதிர்பார்த்ததை விட இது எனக்கு அதிகமாகவே திருப்பித் தந்திருக்கிறது. இந்த ஆட்டத்திற்கும், என்னுடன் களத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இந்தப் பயணத்தில் என்னை அங்கீகரித்த ஒவ்வொருவருக்கும் நன்றியோடு நான் விலகிச் செல்கிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நான் எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்.”