கொழும்பு – கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் அதிபரும், உயிர்மாய்த்துக் கொண்ட மாணவியை துஷ்பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும் கலந்து கொண்டிருக்கவில்லை.
அவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.