தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இந்தப் பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பண்டைய காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம். இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்கின்றனர். வெந்நீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,செரிமானம் மேம்படவும் , உடல் எடையைக் குறைக்கவும், மன அழுத்தம் குறையவும்,சரும பிரச்சனைகள் மற்றும் வலி நிவாரணியாகவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
வெந்நீர் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன்மூலம் தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
செரிமானம் மேம்படும்:
வெதுவெதுப்பான நீர் குடிப்பது செரிமான மண்டலத்தைத் தூண்டி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் மலத்தை மென்மையாக்கி கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் குடிப்பது செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து உணவு எளிதாக ஜீரணிக்கவும், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவி செய்கிறது.
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது:
வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரி வேகமாக எரிக்க உதவுகிறது. மேலும், வெந்நீர் குடிப்பதால் பசி குறைந்து அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
மன அழுத்தம் குறையும்:
உடலில் உள்ள கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்தி, மனதை அமைதியாக வைக்கிறது. இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
சரும பிரச்சனைகள் குறையும்:
சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வெந்நீர் குடித்து வந்தால் அவை குறைய நேரிடும். வெந்நீர் தோலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி தோலை சுத்தமாக வைக்கிறது. மேலும், முகப்பரு, சரும அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
வலி நிவாரணி:
வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும் வெந்நீர் குடிப்பதால் குறையும் என சொல்லப்படுகிறது.
எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.