“அவர்களது மரணம் நமது மனச்சாட்சியை உலுக்குகிறது” – சிராஜ் மஷ்ஹுர் –

1185
1990 ஆகஸ்ட் 03
நினைவின் மடல்களில் ஈரம் கசிகிறது. மகத்தான வரலாறுகளுக்குப் பின்னே கண்ணீரும் காயமும் இருந்திருக்கிறது என்று மனம் ஆறுதல் சொல்ல முனைகிறது. ஆனாலும் இழப்புகளே தலைவிதி என்றானபின், வலிகளையும் வேதனைகளையும் சுமந்துதானே ஆகவேண்டும்.
நமக்கும் மகத்தான வரலாறு காத்திருக்கிறதா? பல கேள்விகளைப் போலவே இதற்கும் நம்மிடம் விடையில்லை.
ஆயினும், அந்த உன்னதமான வரலாற்றுக்கான காத்திருப்பில்தான் நமது மூச்சுக்காற்று உஷ்ணத்தால் கொதிக்கிறது.
காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை நமது நினைவுகளில் இருந்து ஒருபோதும் நீங்கப்போவதில்லை.
நாம் மிக ஆழ்ந்து நேசிக்கும் இறையில்லங்களில்- சுஜூதுகளில்- தக்பீர் ஒலிகளிடையே நமது சகோதரர்கள் சல்லடையாக்கப்பட்டனர். தாம் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பதைக்கூட அறிய அவர்களுக்கு அவகாசம் தரப்படவில்லை.
கொல்லப்பட்டோருள் தள்ளாடும் முதியவர்கள் இருந்தார்கள்; நடுத்தர வயது மனிதர்கள் இருந்தார்கள்; இளைஞர்கள் இருந்தார்கள்; எதுவுமே அறியாத சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களது அழுகுரல்கள் காற்றில் தேய்ந்து அழிந்து போய்விட்டன. ஆயினும், அவர்களது மனச்சாட்சி அழியவில்லை. அவர்கள் நம்மிடம் நியாயம் கேட்கின்றனர். நமது மனச்சாட்சியை உலுக்குகின்றனர்.
ஆம். அவர்கள் மரணத்தை விதைத்திருக்கிறார்கள். நமது நீண்ட விடுதலைப் போராட்டப் பாதையின் வீர வரலாறாய் ஆகியிருக்கிறார்கள். நம்மை வஞ்சிக்கின்ற ஆதிக்க சக்திகளிடமும் நம்மை ஏமாற்றி நமக்குத் துரோகம் இழைக்கும் அரசியல் தலைமைகளிடமும், இந்த வீர ஷுஹதாக்கள் மீண்டும் உயிர் பெற்று வந்து கண்ணீர் சிந்தப் போவதுமில்லை; கோழைகளாய் கதறியழப் போவதுமில்லை. அவர்களது மரணம் மிகவும் வலிமையானது. அது ஒன்றே போதும்- ஆயிரம் கேள்விகளை எழுப்புவதற்கு.
தங்களது மரணத்தால் எங்களுக்கெல்லாம் அவர்கள் உந்துதலாய் ஆகியிருக்கிறார்கள். தங்கள் மாயக்கரங்களால் எங்கள் குரல்வளைகளை நசுக்கவரும் எவருக்கும் நமது வளரும் தலைமுறை சரியான பதிலைச் சொல்லும். வீர ஷுஹதாக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இனி விடைகள் வரும். இன்ஷா அல்லாஹ் அது நிச்சயம் வரும்.
ஆதலால்தான் நமது ஒட்டு மொத்த இழப்புகளின் நினைவாய் இந்த ஆகஸ்ட் 03 ஐ நாம் ஷுஹதாக்கள் தினமாய் ஞாபகம் செய்கிறோம். ஒன்றுமே அறியாத இந்த அப்பாவி உயிர்களுக்கு- அவர்களின் மனச்சாட்சிக்கு- இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு- நமது சமூக விடுதலைக்கு நாம் அளிக்கும் பதில்தான் என்ன?
அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை அளிப்பானாக! நமக்கு மனவுறுதியையும் பொறுமையையும் தொடர்ந்த செயல் வேகத்தையும் தருவானாக!
சிராஜ் மஷ்ஹுர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here