எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள்.
காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள்.
உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா?
எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.
ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறப்படுகிறது.
ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது..
அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுகிறது.
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
“பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே”
ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை” நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது.
உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது.