அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள், குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தி நாடுகளில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் மூலம், 2030ஆம் ஆண்டளவில் சுமார் 14 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட (preventable) காரணங்களால் உயிரிழப்பர் என கணிக்கப்படுகிறது.
இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் சிறுவர்கள் எனவும், ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் எச்சரிக்கப்படுகிறது.
இந்த தாக்கம், அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகமான யு.எஸ். எயிட் (USAID) வழங்கும் நிதியில் 80% க்கும் அதிகமான தொகையை இரத்து செய்வதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்ததற்குப் பின்விளைவாக ஏற்படலாம் என கூறப்படுகிறது.
தி லான்செட் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்த நிதி விலகல், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பெருந்தொற்றுகள் அல்லது பெரிய ஆயுத மோதல்களுக்கு நிகரான சுகாதாரப் பேரழிவுகளை ஏற்படுத்தும்,” என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியுதவி நிறைவேற்றியிருந்த திட்டங்கள் இரத்து செய்யப்படுவதால், பல நாடுகளின் சுகாதார முன்னேற்றம் இரண்டு தசாப்தங்கள் பின்வாங்கும் அபாயமும் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.