சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility – EFF) திட்டத்தின் கீழ், இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் ஒப்பந்தங்களுக்கு முரணானவை என நிர்வாகக் குழுவால் கவனிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதையும், IMF விதிமுறைகள் மீறப்பட்டதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இவை வேண்டுமென்றே நிகழ்ந்தவையல்ல எனக் கருதப்பட்டுள்ளதால், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாது என IMF அறிவித்துள்ளது.
IMF துணை முகாமைத்துவ பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில்,
“2023 இல் EFF ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட செயல்கள் மற்றும் வழங்கிய தகவல்களில் தவறுகள் இருந்தன. குறிப்பாக, செலுத்தப்படாத செலவுகள் குறித்து தவறான தகவல்கள் தரப்பட்டன. இது நிதி அமைச்சு உள்ளிட்ட பொது நிறுவனங்களின் தகவல் மேலாண்மைக் குறைபாடுகளாலும், ‘செலுத்தப்படாத செலவுகள்’ என்ற வரையறையில் ஏற்பட்ட தவறான புரிதலாலும் ஏற்பட்டது.”
“இலங்கை அரசாங்கம், தவறுகளை திருத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. செலுத்தப்படாத செலவுகளை தற்போதைய நிதி கட்டமைப்பில் திருப்பிச் செலுத்தியுள்ளதுடன், எதிர்கால தவறுகளை தவிர்க்க புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டம் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் உறுதி அளித்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட IMF நிர்வாகக் குழு, ஒப்பந்தங்களுக்கு முரணான கொள்முதல்களுக்கான விலக்குகளை வழங்கியுள்ளது
IMF இன் VIII ஆம் பிரிவின் 5ஆம் உட்பிரிவு விதிகளை மீறியமை தொடர்பாக வேறு நடவடிக்கை எடுக்காது என அறிவித்துள்ளது
இந்த நிலையில், இலங்கை மீதான நம்பிக்கையை வைத்தே IMF தனது உதவிகளை தொடரும் முடிவை எடுத்துள்ளதெனக் கூறலாம்.