நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சூழ்நிலைகளுடன் கூடிய 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி, அதிக ஆபத்துள்ள 08 மாவட்டங்களில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க கூறுகையில்,
“மொத்தமாக 229 பாடசாலைகள் ஆய்வு செய்யபட்டன. இதில் 29 பாடசாலைகளில் நுளம்பு குடமிகள் காணப்பட்டுள்ளன. இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் ஆபத்தான நிலையாகும். பாடசாலை நிர்வாகம், கல்வி அமைச்சு மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் டெங்கு பரவலுக்கு இது ஒரு நேரடி வாய்ப்பாக மாறும்.”
மொத்தமாக 19,774 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் 5,085 இடங்கள் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலையுடன் காணப்பட்டுள்ளன.
மேலும், 567 வளாகங்களில் நுளம்பு குடமிகள் நேரடியாக கண்டறியப்பட்டுள்ளன என வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நுளம்பு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.