தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர்,
“பொலிஸ் அதிகாரிகளின் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது,” என கூறினார்.
பொலிஸ் சேவையில் தற்போதுள்ள 5,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
உப பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (Constable) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், விரைவில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
இதேவேளை, 5,000 கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன், 1,500 விசாரணை தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதன் மூலம், பொலிஸ் சேவையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.