இந்த ஆண்டு கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 13ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்;
“.. இந்த 68 சம்பவங்களில், 50 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நேரடியாக தொடர்புடையவையாகும். மீதமுள்ள 18 சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களால் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுகளில், 37 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவர். 39 பேர் காயமடைந்துள்ளனர், அதில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சம்பந்தம் கொண்டவர்கள்..” எனத் தெரிவித்தார்.
இது குறித்த விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு மற்றும் நுணுக்க புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.