தமிழ் சினிமாவின் சிகரமான நடிகைகளில் ஒருவரும், பல தலைமுறைகளின் மனங்களில் இடம் பிடித்தவருமான பழம்பெரும் நடிகை பி. சரோஜா தேவி, இன்று (14) காலை தனது 87ஆவது வயதில் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ஆர், ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல முக்கியமான படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
அவரது நடிப்பு, அழகு மற்றும் திறமைக்கு பாராட்டாக இந்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளார்.
சினிமா, கலாசாரம், மற்றும் மக்களின் நினைவுகளில் நீடித்துள்ள இவர், தனது பங்களிப்புகள் மூலம் இந்திய திரைப்பட வரலாற்றில் மறக்கமுடியாத இடம் பெற்றவர்.
சரோஜா தேவியின் மறைவுக்கு திரைப்படக் களத்தின் பலரும், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்பட பல தரப்பினர் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலிகளையும் தெரிவித்துவருகின்றனர்.
இவரது மரணம் இந்திய சினிமா உலகிற்கு ஒரு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.