மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை 17 ஆவது மைல் தூணுக்கருகே அமைந்த வியானா கால்வாயில், மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவர் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
விபத்துத் தகவலைத் தொடர்ந்து, மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டியில் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் இருவரும் உயிரிழந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மேலும் விசாரணைகள் மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.