இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கிடையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த ஆணைக்குழு இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
ரொஹான் பிரேமரத்ன, தன்னை கைது செய்யும் முயற்சிகள் உள்ளன என சந்தேகம் தெரிவித்து, முன்பிணை மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகிய அதிகாரி, “தற்போது அவரை கைது செய்ய வேண்டிய நிலை இல்லை” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானபின், தேவையான வாக்குமூலங்களை வழங்க வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார்.
மனுதாரரின் சட்டத்தரணியிடம், இந்த அம்சங்களை தெரிவித்துவிட்டு, இது தொடர்பான நடவடிக்கைகள் வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிக் கொண்டு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.