எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி இன்று நாடாளுமன்றத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக பொலிசாரினால் தவறாக கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
சபாநாயகரிடம் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
‘வெளிநாட்டில் இருந்த எனது மகனை அழைத்துச் சென்று விமான நிலையத்திலிருந்து திரும்பும் போது கோட்டை பொலிசாரினால் நான் கைது செய்யப்பட்டேன். குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். விசாரணையில் நான் மது அருந்தவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது,’ என்று நாடாளுமன்றத்தில் திலீப் வேதராச்சி விளக்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.