மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“அந்த பள்ளிவாசலுக்கு சட்டவிரோதமான பாதைகள் வழியாக வெளியார்களும் நுழைந்துள்ளனர். இதன் போது சிறைச்சாலைக்குள் தொலைபேசிகள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை வீசப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இஸ்லாமிய கைதி ஒருவர் உயிரிழந்தபோது, பெரிய எண்ணிக்கையிலான நபர்கள் பள்ளிவாசல் வழியாகச் சென்றனர். இது, சிறைச்சாலை பாதுகாப்பிற்கும் கைதிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
எனவே, அப்போது சிறைச்சாலை அதிகாரிகளால் பள்ளிவாசல் மூடப்பட்டதை நியாயமாகக் கருத வேண்டும். மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில், அதேபோன்ற பாதுகாப்பு சிக்கல்கள் மீண்டும் எழலாம். பிரிதொரு இடத்தில் காணி வழங்கப்படும் “
அதையடுத்து, அரசாங்கம் தற்போது அந்த பள்ளிவாசலை திறக்க அனுமதி வழங்குவதில்லை என உறுதியாகத் தெரிவித்தார்.