பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பொலிஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய சிசிடிவி காணொளியை மையமாகக் கொண்டு, கடந்த ஜூலை 25ஆம் திகதி, பெலவத்தை பன்னிப்பிட்டிய வீதியில் அமைந்த உணவகமொன்றுக்கு நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்ற சம்பவம் தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுபற்றி பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவக ஊழியர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் தங்க நகை திருட்டு குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உணவகத்தின் முன் நடைபாதையில் சிலர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகவும், இது தொடர்பாக உணவக உரிமையாளரிடம் கேள்வி எழுப்பும் சிசிடிவி காட்சிகள் தவறாக விளக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச அதிகாரிகள் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக உண்மையான தகவல்கள் உள்ளபட்சத்தில், அதற்கான முறைப்பாடுகள் பதிவு செய்யலாம் எனவும், எந்தவொரு அதிகாரியின் பதவியையும் பொருட்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.