கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மேலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட மலர் விற்பனைக் கடைகள் அமைந்துள்ள இடங்களைப் பற்றியும் தன்னுடைய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கண்டி நகருக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “கண்டி நகரில் மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் நிலத்தடி சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தி வீதியை கடக்கின்றனர். இந்த பாதைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணமாக, பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனை கடைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாக வீதியை கடப்பது அவசியமானதே, அதே நேரத்தில் மலர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காமல் தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.