இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை ரூ. 2 இல் இருந்து ரூ. 3 ஆக அதிகரிக்கும் நோக்கில் 2025 ஏப்ரல் 01ஆம் திகதியிடப்பட்ட 2430/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (22) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இது தொடர்பான திருத்தம் 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதுடன், 1999ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க புகையிலை வரிச்சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்ட கட்டளையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கடந்த வருடத்தில் பீடி தயாரிப்பிற்காக 1140 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும், இதில் 840 அனுமதிப் பத்திரங்களே வரி அதிகரிப்பின் பின்னர் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஈட்டப்பட்ட வருமானமும் குறைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த வருடத்தில் 2 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 1,055 மில்லியன் ரூபாய் மாத்திரமே வருமானமாக ஈட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வருடத்தில் இதுவரை 469 மில்லியன் ரூபாய் மாத்திரமே வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. அதிக அளவிான பீடிகள் நாட்டுக்குள் கடத்திவரப்படுகின்றமை மற்றும் இதற்கு எதிராகப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே இதற்குக் காரணம் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
வரி அதிகரிப்பின் காரணமாக அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படுவது குறைவடைந்திருப்பதுடன், சட்டவிரோத சந்தை அதிகரித்திருக்கின்றதா என குழுவின் உறுப்பினர்கள் கேள்வியேழுப்பினர்.
அதிக வரிகளைப் பரிந்துரைக்கும்போது வணிகங்கள் தலைமைறைவாகும் என்ற பொருளாதாரக் கொள்கையை மேற்கோள்காட்டிய அவர்கள், பீடிக்கான வரிகளைக் குறைக்கும்போது சட்டரீதியான பீடி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதன் ஊடாக வருமானமும் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
வருவாய் இலக்குகளை அடைவதில் அவற்றின் செயல்திறனை நிரூபிக்க, எதிர்கால வரி சீர்திருத்தங்கள் குறித்த முடிவுகள் பொருத்தமான அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று குழு அறிவுறுத்தியது.
இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சாணக்கியன் இராசமாணிக்கம், (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ் மற்றும் நிமல் பலிஹேன ஆகியோர் கலந்துகொண்டனர்.