கொழும்பை அண்மித்த பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும் டெல்டா

428

டெல்டா கொவிட் பிறழ்வு கொழும்பை அண்மித்த பகுதிகளில் மிக வேகமாக பரவி வருவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எழுமாற்று மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இது தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர், கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்க, கடந்த ஜூ​லை மாதத்தின் முதலாவது வாரத்தில் கொழும்பில் பதிவாகிய தொற்றாளர்களில் 19.3 வீதமானவர்கள் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தின் இறுதி வாரம் வரையான காலப்பகுதியில் 75 வீதமாக அதிகமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, கொவிட் நோயாளர்கள் அதிகரித்து செல்லும் நிலையில், ஒக்சிஜன் தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமை ஏற்படுவதை தவிர்த்துக்கொள்வதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்த்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொவிட் நோயாளர்கள் அதிகரித்து செல்லும் நிலையில், வைத்தியசாலைகளில் ஏனைய நோயாளர் விடுதிகளையும் கொவிட் சிகிச்சைகளுக்காக பயன்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here