கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள முடிவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று ஆராயப்படுகின்றது.
குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்த்தன விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்படுகின்றது.
இன்றைய தினம் மனுக்களுக்கு ஆதரவான சத்தியக் கடதாசிகளை அமைச்சர்களான விமல் வீரசன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா முன்வைத்தார்.
எல்லே குணவங்ச தேரர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்ஹ ஆகியோர் குறித்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.