சவூதி அரேபியா – இலங்கை இருதரப்புக் கூட்டாண்மைக்கு சவூதி அரேபியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும்

992

சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அரச அமைச்சர் கௌரவ அடெல் பின் அஹமத் அல்ஜுபைர் அவர்ளுடனான மெய்நிகர் கலந்துரையாடலின் போது, சவூதி அரேபியாவுடனான இருதரப்பு உறவுகளைப் பாராட்டிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான சாத்தியங்களை எடுத்துரைத்தார்.

1974 முதல் இரு நாடுகளும் தூதரக உறவுகளை வலுப்படுத்த எடுத்த முற்போக்கான நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளுக்கு உறவை ஆழப்படுத்தி, விரிவாக்குவதற்காக சவூதி அரச குடும்பம் நல்கிய பங்களிப்புக்களை நினைவு கூர்ந்தார். மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் முஹமத் பின் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அல் சவுத் ஆகியோருக்கான இலங்கை ஜனாதிபதி மற்றும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உதவியமையை வலியுறுத்திய அமைச்சர், இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவிற்கு இலங்கையின் பாராட்டுக்களைத் தெரிவித்தார். திறமையான மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குமாறு அவர் சவூதி அரேபியாவை ஊக்குவித்தார். கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்ப உதவிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அபிவிருத்தித் துறைகளிலும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்புக்கள் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சவூதி அரேபியாஇலங்கை இருதரப்புக் கூட்டாண்மைக்கு சவூதி அரேபியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இலங்கையால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளில் இருதரப்பு உறவுகளில் மேலும் வாய்ப்புக்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் குணவர்தனவுக்கு சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அரச அமைச்சர் உறுதியளித்தார்.

இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நெருக்கமாகப் பணியாற்றியமையையும், பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் வேட்புமனுவை ஆதரித்தமையையும் இரு அமைச்சர்களும் நினைவு கூர்ந்தனர். சவூதி அரேபியா மற்றும் பரந்த பிராந்தியம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிப்பதற்காக பிராந்திய ஒத்துழைப்புக்களைக் கோரிய சவூதி பசுமை மற்றும் மத்திய கிழக்குப் பசுமை முயற்சியை இலங்கை ஆதரித்தமை மேலும் சிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here