தாயின் உடலைத் தேடி அலையும் மகன் : உயிர்களை மட்டுமல்ல உடல்களையும் தொலைக்கும் அவலம்! ராகம வைத்தியசாலையில் சம்பவம்!

553

கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன. இருந்தாலும் சடலங்கள் குவிந்துள்ளன.

கொவிட் நோயாளர்கள், மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொவிட் சடலங்களைத் தொலைக்கும் அவலங்களும் நடக்கின்றன.

ராகம வைத்தியசாலையில் உயிரிழந்த அம்மாவின் சடலத்தை தேடும் ஒரு மகன் இதுகுறித்து தகவல் தந்தார்.

கொவிட் சடலத்தை உறவினர்களுக்கு காட்டுவதற்குக் கூட 1000 ரூபா பணம் கேட்கின்றனர். அம்மாவின் சடலத்தை தொலைத்த வைத்தியசாலை ஊழியர்கள், எரித்தது எங்கே என்று தேடி சொல்கிறோம், அங்கு சென்று கும்பிட்டுவிட்டு போங்கள். வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று அலட்சியமாக சொல்கின்றனர். அம்மாவின் சடலம் எங்கே என்று அப்பா தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்என்று சடலத்தைத் தொலைத்த மகன் பரணிதரன் தனது வேதனையை பகிர்ந்துகொண்டார்.

வத்தளை, ஹூனுப்பிட்டியில் வசிக்கும் பரணிதரன், கடந்த 12ஆம் திகதி தனது தாய்க்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட, 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்ப எடுத்து அம்பியூலன்ஸ் மூலம் ராகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்த பின்னர் ராகம வைத்தியசாலையின் 30ஆவது இலக்க கொவிட் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், அன்று மாலை 6.30 இற்கு அவரது தாய் உயிரிழந்துள்ளார். மறுதினம் காலை பரணிதரனின் சகோதரன் வைத்தியசாலைக்குச் சென்றபோது தாய் இறந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. பின்னர், இறுதிக் கிரியைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை வீட்டார் செய்து முடித்துள்ளனர். ஆனால் இறுதியாக சடலத்தை அடையாளம் காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்ட போது சிவகாமி என்ற பெயர் அட்டையுடன் வேறு ஒரு சடலம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பமடைந்த உறவினர்கள் தாயின் சடலத்தை கேட்டுள்ளனர். எனினும் வைத்தியசாலை நிர்வாகம், இதுவரை எந்த பதிலும் தரவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

இறுதியாகதாயின் உடலை எரித்த இடத்தைக் கண்டறிந்து சொல்கிறோம், அங்கு சென்று வணங்கிவிட்டு செல்லுங்கள்என வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பதாக பரணிதரன் தெரிவித்தார்.

இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட முயற்சித்த போதிலும், தமது பொலிஸ் பிரிவான கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் அதனை ஏற்க முடியாது என்றும் ராகம பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் கூறியுள்ளனர். ராகம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது, இது கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமானது, முறைப்பாட்டைப் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கொடூரத்தால் உறவுகளை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இறுதி அஞ்சலி செய்வதற்குக்கூட இவர்களின் அலட்சித்தினால் முடியாமல் போய் இருப்பதாக பரணிதரன் கவலை தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here