கொவிட் 19 வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று

846

நிலவும் கொவிட் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை இன்றைய தினம் மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய இன்று முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவிருப்பதுடன், முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 03 கட்டளைகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அதியாயம் 235) தீர்மானங்கள் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.50 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

அத்துடன், பல்வேறு காரணங்களால் இதுவரை கேட்கப்படாதுள்ள வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமையை ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய அன்றைய தினத்தில் பாராளுமன்றத்தை அடுத்ததாகக் கூட்டுவதற்கும் இங்கு முடிவானது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here