யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் , கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இன்று பகல் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை அவர்கள் கைவிட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை சில பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது.