காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

924

காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 180 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்கா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியபின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஜோ பைடன், காபூல் விமான நிலையத்தில் நிலைமை தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இராணுவத் தளபதிகளிடம் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவே இறுதித் தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கோ, அமெரிக்க வீரர்களுக்கோ யாராவது தீங்கு விளைவிக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறிய அவர், இதில் ஒருபோதும் சந்தேகத்திற்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here