ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு – பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் எதிர்ப்பு

857

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை பிணையில் விடுவிப்பதை தாம் எதிர்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைக்க எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த மனு இன்று (27) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, தனது கட்சிக்காரர்களை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் வழக்கை மேற்கொண்டு தொடர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிணை விண்ணப்பத்திற்கு தாம் எதிர்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, மனுவை எதிர்வரும் 29ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here