தேவை கருதி, எரிபொருள் விநியோகத்திற்காக லங்கா IOC நிறுவனத்திற்கு தேவையான பௌசர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெட்ரோலிய களஞ்சிய முனையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
டோக்கன் வழங்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள அதிக கேள்விக்கு ஏற்றவாறு எரிபொருளை வழங்க முடியாது என்ற போதிலும், தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்றுமதி கைத்தொழிலுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் மனோஜ் குப்தா கூறியுள்ளார்.
லங்கா IOC நிறுவனத்தால் சிபெட்கோ நிறுவனத்திற்கு 7,500 மெட்ரிக் தொன் டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக 2 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, திருகோணமலையில் உள்ள IOC நிறுவனத்திற்கு சொந்தமான 03 எண்ணெய் களஞ்சியங்களிலும் பெட்ரோல் உள்ளதுடன், எதிர்வரும் 13ஆம் திகதிக்கு தேவையான டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள பல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக 700 மில்லியன் ரூபாவை சிபெட்கோ நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் ஆனால் எரிபொருள் விநியோகிக்கப்படும் திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டீசலை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலை ஏற்றிய மலேசிய கப்பலொன்று எதிர்வரும் 20ஆம் திகதியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனமொன்றில் முற்பதிவு செய்யப்பட்ட டீசல், இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அத்தியாவசிய சேவைகளுக்கான நாளாந்தம் எரிபொருள் விநியோகம் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.